மத்தியப் பிரதேச மாநிலம் டிக்கம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளிக்குச் சென்ற முதலாம் வகுப்பு மாணவியை, 58 வயதான ஆசிரியர் ஒருவர் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த துயரத்தை தனது பாட்டியிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், உடனடியாக பலேரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் “கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மன்னிக்க முடியாதது” என ஆக்ரோஷம் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கல்வித் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.