உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் காதல் வினோதமான முறையில் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர சிங் பரிமார் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. செல்போனில் நீண்ட நாட்களாகப் பேசி வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் மே 12-ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் திருமணத்தன்று மணமகன் வீட்டார் ஊர்வலமாக வந்தபோது, மணமகளை நேரில் பார்த்த தேவேந்திர சிங் அதிர்ச்சியடைந்தார். அதே சமயம், மணமகளும் “நான் காதலித்து, போனில் பேசிய நபர் இவர் கிடையாது; ராகுல் என்பவரிடம் தான் நான் பேசி வந்தேன்” என்று கூறி திருமணத்தை நிறுத்தினார்.

இந்தத் திடீர் திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக உருவெடுத்தது. ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், மணமகன் மற்றும் அவரது உறவினர்களை சரமாரியாகத் தாக்கினர்.

இதில் மணமகன் காயமடைந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மணமகள் வீட்டைச் சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாரோ ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி ஆள்மாறாட்டம் செய்து காதலித்ததே இந்த மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.