ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 50) ஒரு கூலி தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது தாய்வீட்டில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கோகுல் (வயது 22) அந்தியூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் B.Com படித்து வந்தவர்.
சமீபமாக, கோகுல் அந்தரங்க உறுப்பில் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், வலி குறையாமல், அன்றாட வேலைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு மோசமான நிலையில் சென்றவர், தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரியவந்துள்ளது. நேற்று காலை “வயல்வெளிக்கு போகிறேன்” என்று கூறிவிட்டு, தங்களது புதிய வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் தனது தாயும், தம்பிக்கும் ஒரு உணர்ச்சிப் பொங்கும் வீடியோ பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோவில், “அம்மா… ஊருக்கு போறேன் என்று சொல்வேனே… இப்போது உண்மையிலேயே போகிறேன். வருத்தப்படாதீங்க… தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், அக்காவை திருமணம் செய்து கொடுங்கள்…” என்று கூறியுள்ளார்.
மேலும், தம்பிக்கு கடைசி அறிவுரை போல, “அப்பா அம்மாவை நன்கு பார்த்துக்கொள்… ஊர் சுற்றாதே… படிச்சு நல்ல வேலைக்கு போ… கடினமான வேலைக்குப் போகாதே” என கூறியிருப்பது அனைவரையும் நெஞ்சை உலுக்க வைத்துள்ளது.
இந்த சம்பவம் அந்தியூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல. உளுந்தொலைவு, மன அழுத்தம் இருந்தால் உதவிக்கான இலவச எண் – 1800 599 0019. தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.
