திருமணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்து, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்திய கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரு பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கடந்த 2024 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண்ணின் குடும்பத்தார் பெருமளவு தங்க நகைகளை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,
“திருமணம் முடிந்த முதல் நாளிலிருந்தே எனது கணவர் என்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்து வருகிறார். உடல் ரீதியான மற்றும் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தைத் தவிர்த்து வந்த அவர், என்னைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். எனது நகைகளைப் பெற்றுக்கொண்ட பிறகும், அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை அலட்சியப்படுத்தி வந்தனர்.
கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை கணவர் வீட்டில் தங்கியிருந்த போது, தன்னைத் தொடர்ந்து அவமதித்து வந்ததாகவும், பின்னர் தன்னைத் தொடர்பு கொள்ளாமல் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, கணவர் ராகவேந்திரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (BNS 85 மற்றும் 115(2)) போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், பெங்களூருவில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
