அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெறாத நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த மாதம் இருபத்தியெட்டாம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது நான்காவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போரினால் உலக நாடுகள் முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வரும் வாரத்தில் ஈரான் மீதான தாக்குதல் முன்னெப்போதையும் விடக் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஈரானியப் பிராந்தியங்கள் மற்றும் அந்நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் பயங்கரமான பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் தொடங்கியபோது ஒரு வார காலத்திற்குள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது நான்கு வாரங்களைக் கடந்தும் போர் ஓயாமல் நீடித்து வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் தாக்குதலின் வீரியம் அதிகரிக்கும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால் இப்பகுதியில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.