சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தானுக்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கும் (OIC) இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் பேசிய இளம் பிரதிநிதி அனுபமா சிங், உலக நாடுகளின் முன்னிலையில் பாகிஸ்தானின் நிலையைத் தோலுரித்துக் காட்டினார்.
கூட்டத்தில் பேசிய அனுபமா சிங், “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி, அது எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை அந்த நாடு உடனடியாக காலி செய்ய வேண்டும். தனது நாட்டின் அரசியல் உள்நோக்கங்களுக்காகப் பாகிஸ்தான் பரப்பும் பொய்யான பிரச்சாரங்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ‘கிளிப்பிள்ளையாக’ OIC அமைப்பு மாறிவிட்டது” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு முழுமையான ஆட்சி காலத்தைக் கூட முடிக்கத் தகுதியற்ற ஒரு நாடு, ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. காஷ்மீர் தேர்தலில் பதிவான சாதனை அளவிலான வாக்குகள், அங்குள்ள மக்கள் பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாகும்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டிய அனுபமா சிங், “ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி பட்ஜெட் என்பது, பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பிச்சை கேட்டிருக்கும் உதவித் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். காஷ்மீரின் செனாப் நதி மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தைக் கூட பாகிஸ்தான் பொய் என்று கூறினால், அந்த நாடு ஒரு கற்பனை உலகில் வாழ்வதாகத்தான் அர்த்தம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேலும் சுமார் ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
