அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் மிக உயரிய சிவிலியன் விருதுகளைப் பெற்ற ஒரே உலகத் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.

சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் வந்து கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார். ராஜதந்திர உறவுகளில் இது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு (கெனெசெட்) சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு உரையாற்றிய அவருக்கு, அந்நாட்டு சபாநாயகர் இஸ்ரேலின் உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மாறுபட்ட துருவங்களாகத் திகழும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் உயரிய விருதுகளைப் பெற்றது உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை பறைசாற்றுவதாக உள்ளது.  கடந்த 2018-ம் ஆண்டு பாலஸ்தீன நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீனம்’  விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

மேலும்  தற்போது இஸ்ரேல் வழங்கியுள்ள உயரிய விருதின் மூலம், இரு நாடுகளின் கௌரவத்தைப் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.