சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டம் அம்பிகாபூர் அருகே உள்ள பிகிடிஹ் கலா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரதீப் அகரியா என்ற நபர், மது போதையில் தனது 23 வயதுடைய கர்ப்பிணி மனைவி ஹீராவை மரத்தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத்தின் உச்சமாக, அவரது அந்தரங்கப் பகுதியில் கிட்டத்தட்ட 10 இன்ச் நீளமுள்ள இரும்பு அரத்தை வலுக்கட்டாயமாகச் செலுத்தி சித்திரவதை செய்துள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதல் நடந்தபோது, இவர்களது நான்கு வயதுடைய மூத்த மகள் உட்பட நான்கு குழந்தைகளும் வீட்டிலேயே இருந்துள்ளனர். தந்தையின் இந்த மிருகத்தனமான செயலை அந்த நான்கு வயது சிறுமி தனது கண்களால் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, மயக்கமடைந்த மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி, அம்பிகாபூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதீப் கொண்டு சென்றுள்ளார்.

மேலும் அங்கு மருத்துவர்களிடம் இது ஒரு சாலை விபத்து என்று கூறி ஏமாற்ற முயன்றார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்ததும், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததும், அவரது உடலில் 17-க்கும் மேற்பட்ட பலத்த காயங்கள் இருந்ததும், அவரது அந்தரங்க உறுப்பிலிருந்து 10 இன்ச் இரும்புப் பொருள் மீட்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. பின்னர், அந்த நான்கு வயது சிறுமி அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி பிரதீப்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.