கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவு அளிக்கப்பட்டது. இந்த குழுவை அமைத்தது உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி, தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நீதித்துறையினரே நேரடியாக இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தவெக வலியுறுத்தியுள்ளது.

இந்த மனுவின் மீது விசாரணை இன்று (அக்.10) நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவு, தமிழக அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.