கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சார்பில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் 10 பேர் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் மனம் திறந்துள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய், அண்மையில் அவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார். இந்தச் சூழலில், ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ நேர்காணல் ஒன்றில் அஜித் பேசிய கருத்துகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தத் துயர சம்பவம் குறித்துப் பேசிய அஜித், “நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும் பொறுப்புதான். இதில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு” என்று தெரிவித்தார்.

மேலும், “கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக ஆக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

“ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்று அஜித் கணிவுடன் வலியுறுத்தியுள்ளார்.