உலகில் மனிதர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் நூற்றுக்கணக்கான உயிருள்ள பூச்சிகளையும், கரப்பான் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும் தகவல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயதான கார்லோஸ் என்பவர், தனது வினோத உணவுப் பழக்கத்தால் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (My Strange Addiction) கலந்துகொண்ட அவர், உயிருள்ள பூச்சிகளை மிகச் சாதாரணமாக மென்று சாப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பூச்சிகளைச் சாப்பிடுவது குறித்து கார்லோஸ் கூறுகையில், “பூச்சிகள் எனக்குப் பிடித்தமான தின்பண்டங்கள் (Snacks). இதன் சுவை ‘பட்டர் பாப்கார்ன்’ போல இருக்கும். குறிப்பாக, கரப்பான் பூச்சிகளின் உட்பகுதி ‘கஸ்டர்ட்’ (Custard) போன்று இனிப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பூச்சிகள் தனது வாய்க்குள் ஊர்ந்து செல்வதும், நாக்கின் மீது அவை ஏற்படுத்தும் உணர்வும் தனக்கு மசாஜ் செய்வது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் வினோதமான காரணத்தைக் கூறியுள்ளார்.

தனது 4 வயதிலிருந்தே பூச்சிகளைச் சாப்பிடும் பழக்கம் தனக்கு இருந்ததாக கார்லோஸ் கூறுகிறார். “நான் இந்தப் பூச்சிகளைச் மென்று சாப்பிடும்போது, அவற்றின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் ஒரு எஜமானனாக என்னை உணர்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை இல்லாமல் இருக்கும் கார்லோஸ், தனது சேமிப்புப் பணத்தை இதுபோன்ற பூச்சிகளை விலைக்கு வாங்குவதிலேயே செலவிடுவதாகவும், ஒருமுறை பூச்சிக் கடையில் கரப்பான் பூச்சிகளை வாங்க சுமார் 8 டாலர் (சுமார் 650 ரூபாய்) வரை செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  உயிருள்ள பூச்சிகளைச் சாப்பிடுவது அவரது உடல்நலனைப் பாதிக்கும் என்றும், எதிர்காலத்தில் கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், கார்லோஸ் தனது வினோதப் பழக்கத்தை விடுவதாகத் தெரியவில்லை.