சீனாவின் ஜெஜியாங் மாகாணம், வென்ஜோ நகரில் உள்ள ஒரு அக்கம் பக்கக் குழுவில் (Community Committee) பணிபுரியும் சில ஊழியர்கள், முக அங்கீகார (Face Recognition) வருகை பதிவு அமைப்பை ஏமாற்றுவதற்காக சக ஊழியர்களின் முகப் புகைப்படங்களை அச்சிட்டு, அவற்றை முகமூடிகளாக பயன்படுத்தியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வென்ஜோ நகர செய்தித்தாளின் தகவலின்படி, அங்கு பணிபுரியும் லி என்ற குடியிருப்பாளர், பல ஊழியர்கள் சக ஊழியர்களின் உயர் தெளிவுப் புகைப்படங்களை அச்சிட்டு முகமூடிகளாக வடிவமைத்து, அவற்றை அணிந்து வருகை கடிகார அமைப்பை ஏமாற்றினர் என்று புகார் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஒரே ஊழியர் பலரின் சார்பாக செக்-இன் செய்ய முடியும் என்பதால், சிலர் வேலைக்கு வராமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, செக்-இன் கருவியின் மேல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த மோசடியில் எத்தனை பேர் ஈடுபட்டிருந்தனர், மேலும் விசில்ப்ளோவர் லி அந்த வீடியோவை எவ்வாறு பெற்றார் என்பது தெளிவாக தெரியவில்லை.

சீனாவில் உள்ள அக்கம் பக்கக் குழுக்கள் தன்னாட்சி அமைப்புகளாக செயல்படுகின்றன. அவற்றில் பணிபுரிபவர்கள் அரசு ஊழியர்களாக கருதப்படுவதில்லை; முறைப்படி சம்பளம் கிடைக்காது. சமூக மேலாண்மை, மத்தியஸ்தம் மற்றும் அடிப்படை நிர்வாக உதவிகள் போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

வென்ஜோவில் ஏற்பட்ட இந்த வருகை மோசடி குறித்து கடந்த அக்டோபரில் லி, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் டிசம்பர் 31க்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.