அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் மகளிர் மருத்துவ நிபுணர் மேஜர் பிளேன் மெக்ரா, மருத்துவ பரிசோதனைகளின் போது பல பெண் நோயாளிகளை ரகசியமாக படம் எடுத்ததாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். CNN தகவலின்படி, அவர்மீது அநாகரீக காட்சி பதிவு, அதிகாரியை தகாத முறையில் நடத்தல் தவறான அதிகாரப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

“சீருடையிலுள்ள வேட்டையாடி” என விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்படும் மெக்ரா மீது நான்கு முக்கிய குற்றங்களும், 61 தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 54 குற்றச்சாட்டுகள் நேரடியாக ரகசியமாக நோயாளிகளைப் பதிவு செய்ததைக் குறிக்கின்றன. மொத்தத்தில் 44 பெண்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவங்கள் டெக்சாஸின் ஃபோர்ட் ஹூட்டில் உள்ள Carl R. Darnall Army Medical Center மருத்துவமனையில் அவர் பணியாற்றிய காலத்தைச் சேர்ந்தவை. அவர் ஹவாயிலுள்ள டிரிப்ளர் ராணுவ மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

CNN விவரிப்பின்படி, மெக்ராவின் நடவடிக்கைகள் குறித்து முதலில் புகார் எழுப்பியவர், மருத்துவச் சந்திப்பிற்கு மனைவியுடன் வந்திருந்த ஒரு போர்வீரர். பரிசோதனை அறையில் உள்ளே நுழைந்தபோது, மருத்துவரின் தொலைபேசி அவரது பாக்கெட்டிலிருந்து சற்றே வெளியே இருந்ததையும், அதன் கேமரா லென்ஸ் நோயாளி நோக்கி இருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.

மருத்துவர் பரிசோதனையை ரகசியமாகப் பதிவு செய்கிறார் என்று சந்தேகித்த அந்த போர்வீரர், உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

“என் மனைவியின் மருத்துவ பரிசோதனையை ஒரு மருத்துவர் பதிவு செய்கிறார்!” என்று அவர் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நாளே மெக்ரா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இராணுவம் இதுவரை மெக்ராவின் முன்னாள் நோயாளிகளில் 1,400 பேரை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளது.

விசாரணையில், மெக்ராவின் தொலைபேசியில் பல ஆண்டுகளாக எடுத்த ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலர் இன்னும் அடையாளம் காணப்படாத பெண் நோயாளிகளின் படங்களும் இதில் அடங்கும்.

ஒரு வழக்கு, மெக்ரா தனது பொறுப்புப் பதவி மற்றும் நம்பிக்கை நிலையைப் பயன்படுத்தி பெண்களை “பாலியல் ரீதியாக சுரண்டியும், ரகசியமாகப் பதிவுசெய்தும்” வந்ததாக குற்றம் சாட்டுகிறது. 2019–2023 காலத்தில் ஹவாயிலுள்ள மருத்துவ மையத்தில் பணிபுரிந்தபோதும் அவர் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகவும், இதுவரை 75க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக முன்வந்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்ரா அக்டோபர் 2025 இல் பணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது டெக்சாஸின் பெல் கவுண்டி சிறையில் விசாரணைக்கு முந்தைய சிறைவாசம் அனுபவிக்கிறார். ஃபோர்ட் ஹூட் மற்றும் ஹவாயில் உள்ள மருத்துவ மையங்களில் மெக்ராவிடம் சிகிச்சை பெற்ற 3,000 நோயாளிகளுக்கும் விசாரணை குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் சாட்சியங்களை ஆய்வு செய்து, வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க விரைவில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது.