இந்திய கிரிக்கெட்டின் இளைய திறமைகளில் ஒருவரான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை’ (Rising Stars Asia Cup) போட்டியில் பங்கேற்கக் கத்தாரில் உள்ள தோஹாவை அடைந்தபோது, அணியில் இருந்த சீனியர் வீரர்கள் அவரைக் கிண்டல் செய்த வேடிக்கையான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் இந்தியா ‘ஏ’ அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார். இந்த அணியில் ஜித்தேஷ் சர்மா, யுதவீர் சிங் சரக் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Cricket Frenzy India 🔴 (@cricketfrenzyindia)

வைரலான வீடியோவில், வேகப்பந்து வீச்சாளர் யுதவீர் சிங் சரக், வைபவ் சூர்யவன்ஷியிடம் வயது குறித்துக் கேலி செய்ய, அருகில் இருந்த சக வீரர், வைபவ் சூர்யவன்ஷியின் தலைமுடியில் ‘ஜெல்’ (Gel) போட்டிருப்பதாகக் கூறுகிறார்.

அதற்கு வைபவ், “ஜெல் போடவில்லை, தாயின் மீது சத்தியம்!” என்று வேடிக்கையாகப் பதிலளிக்கிறார். இந்த உரையாடலின் முடிவில், வீடியோ எடுத்த வீரர் “கத்தார் போறான் பையன்!”  என்று கூறுகிறார்.

இளம் வீரர் வைபவ் தன் சீனியர் வீரர்களின் கேலிக்குச் சற்றும் சளைக்காமல் பதிலளித்த இந்த வீடியோ, இணையத்தில் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி நவம்பர் 14 முதல் தொடங்கவிருக்கும் இந்தப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்காகத் தனது முதல் போட்டியை விளையாட உள்ளார்.