தேராடூன் மாவட்டம் பிரேம்நகர் பகுதியில், கள்ளக்காதலுக்காகத் தனது கணவனைக் குருடாக்கி விஷம் வைத்துக் கொல்ல முயன்ற மனைவியின் கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கம் பக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்குத் தவறான உறவு இருந்து வந்த நிலையில், அதைக் கணவர் கண்டுபிடித்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் இரவு சண்டை உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் வலியால் துடித்ததைப் பொருட்படுத்தாமல் தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண், டெல்லி மற்றும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டல்களில் தனது காதலனுடன் 15 நாட்களைக் கழித்துள்ளார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய அவர், தனது கணவர் உயிருடன் இருப்பதை அறிந்து, தனது சகோதரியுடன்  சேர்ந்து அவரைக் கொல்லப் புதிய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, கணவருக்கு விஷம் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்துள்ளார். தண்ணீரைக் குடித்தவுடன் மயங்கி விழுந்த கணவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பிரேம்நகர் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் மனைவி மற்றும் அவரது சகோதரி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள காதலனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.