விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் எரமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி என்பது தெரியவந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணை ஜோதிமணி காதலித்து வந்தார். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உமாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் ஜோதிமணி உமாவை தொந்தரவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். உமா கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஜோதிமணி அவரை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உமாவின் பெற்றோர் ஜோதிமணி உயிரோடு இருந்தால் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்காது என யோசித்து அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி உமாவின் தந்தை மாரியப்பன் தாய் பஞ்சவர்ணம் ஆகியோர் நைசாக பேசி ஜோதி மணியை அழைத்துச் சென்று கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் உமா உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது