தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் மம்தா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சரண் (வயது 4), தனுஸ்ரீ (வயது 3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாட்டால் மம்தா தனது கணவரை விட்டு விலகி, தாய் வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் மம்தாவுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவெடுத்த மம்தா, கடந்த ஜூன் மாதம் தனது மகன் சரணை தாய் வீட்டில் விட்டுவிட்டு, மகள் தனுஸ்ரீயை மட்டும் அழைத்துக் கொண்டு பயாஸுடன் சென்றார்.

இந்த நிலையில், சிறுமி தனுஸ்ரீ, அவர்களின் வாழ்வில் இடையூறாக இருக்கிறார் என்ற காரணத்தால், மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து குழந்தையை கொன்று, யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

மனைவியும் மகளும் காணாமல் போனதை தொடர்ந்து, பாஸ்கர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மம்தா மற்றும் பயாஸ் ஆந்திராவில் இருப்பது கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரித்தபோது, குழந்தை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது அம்பலமானது.

இதையடுத்து, போலீசார் சிறுமி தனுஸ்ரீயின் உடலை மீட்டனர். மம்தா மற்றும் பயாஸிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.