அதிமுகவில் கடந்த வாரம் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டினுக்கு, உடனடியாக மாநில அளவிலான முக்கியப் பொறுப்பை வழங்கி அ0திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இவருக்கு, அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் மாநில அளவிலான உயரிய பதவி வழங்கப்பட்டது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பதும், பெரும் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் லீமா ரோஸின் கூடுதல் பின்னணி.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சிக்குத் தேவையான வலுவான பெண் முகங்களையும், செல்வாக்குள்ள நபர்களையும் முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம்.
அதன் ஒரு பகுதியாகவே, லீமா ரோஸை மகளிர் அணியின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தி, கட்சிக்கு புதிய பலத்தைச் சேர்க்க அதிமுக தலைமை ஸ்கெட்ச் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
