அரசியல் களத்தில் அத்திப்பூத்தாற்போல் தோன்றும் மிகச்சில உன்னதமான தலைவர்களில் ஐயா நல்லகண்ணு முக்கியமானவர். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் போன்றோரின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய இவர், தனது 101 வயது வரை எளிய மக்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் மட்டுமே வாழ்ந்தார். பலமுறை பணம், பதவி மற்றும் ஆடம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தபோதும், “இது எனக்கு வேண்டாம்; கட்சிக்கே சேரட்டும்” என்று ஒரு கோடி ரூபாய் மற்றும் விலை உயர்ந்த காரைக்கூட அடுத்த நொடியே திருப்பிக் கொடுத்தவர். தகைசால் தமிழர் விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாயையும் தன் கைக்காசையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கே வழங்கிய நேர்மையின் சிகரம் இவர்.
கோடி கோடியாய் சொத்து சேர்த்துக் கொண்டு ஆடம்பரத்தில் மிதக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தன்னிடத்தில் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் உறுதியாகச் சொன்னவர். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது, அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவது என இறுதிவரை எளிமையைக் கடைப்பிடித்தார். தனக்கென ஒரு ரூபாய் கூடச் சேர்க்காமல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட இவரைப் போன்ற ஒரு தலைவர் இனி வருவது என்பது 100 சதவீதம் சாத்தியமற்றது. மக்கள் தலைவன் நல்லகண்ணுவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு.
