மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே மிக ஆவேசமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இறையாண்மையைக் காக்க, தங்களது மண்ணில் கடைசி வீரரும், கடைசி தோட்டாவும் இருக்கும் வரை பின்வாங்காமல் போர்க்களத்தில் நிற்போம் என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
இந்த மோதலில் இந்தியாவின் பெயரையும் ஈரான் குறிப்பிட்டுள்ளது ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் IRIS தேனா (IRIS Dena) கப்பல் இந்தியாவின் அழைப்பின் பேரில் தான் அங்கு வந்ததாகவும், எந்தவிதமான ஆயுதங்களும் இன்றி அமைதிப் பயணமாக வந்த அந்த நிராயுதபாணிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் சயீத் கதிப்சாதே குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல், ஒரு மிகப்பெரிய போருக்கு வித்திட்டுள்ளதாக ஈரான் தரப்பில் சொல்லப்படுவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
