சுமார் $2.3 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், மார்ச் 5 அன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார்.
“ஈரானுடனான போருக்குள் எங்கள் பிராந்தியத்தை இழுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எந்த அடிப்படையில் இந்த ஆபத்தான முடிவை எடுத்தீர்கள்?” என அவர் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, யுஏஇ-யில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், இந்தப் போர் வளைகுடா நாடுகளின் அமைதியைப் பெரிதும் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த அரபு உலகம் அவர்கள் விரும்பாத ஒரு போருக்குள் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த முடிவுகளால் அமெரிக்க மக்களுமே ஆபத்தில் சிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ராணுவ விரிவாக்கத்தைக் கையில் எடுத்திருப்பது முரண்பாடானது என அவர் விமர்சித்துள்ளார்.
துபாயின் மிக முக்கியமான வணிக ஆளுமையான அல் ஹப்தூரின் இந்த வெளிப்படையான விமர்சனம், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக அரபு நாடுகளில் எழுந்துள்ள அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.
