ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, ஒழுக்கக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் வீடுகளில் வைஃபை இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் 16ஆம் தேதி வடக்கு பால்க் மாகாணத்தில் சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின், பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர், தகார் ஆகிய மாகாணங்களிலும் இணைய சேவைகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர்.
வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் பொருளாதார இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தற்போது தொலைபேசி நெட்வொர்க்குகள் வழியாக மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடிகிறது. ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
