ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானியக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜக் அர்னவ்’ (Jag Arnav) மற்றும் ‘சன்மார் ஹெரால்டு’ (Sanmar Herald) ஆகிய இந்தக் கப்பல்கள் ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஓமன் அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கப்பலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, இந்தியாவுக்கான ஈரானியத் தூதர் முகமது ஃபத்தாலி உடனடியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்தியாவின் கடுமையான கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Our statement regarding Iran ⬇️
🔗 https://t.co/05hycXPgJ6 pic.twitter.com/HwhqdNL9M8
— Randhir Jaiswal (@MEAIndia) April 18, 2026
“>
ஈரானின் இந்தத் தாக்குதல் தற்செயலானது அல்ல என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் மேற்கொண்டுள்ள ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்தப் பாதையில், இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து ஈரானியத் தூதரிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தடைப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்தை மீண்டும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை இந்திய அரசு தற்போது மிகத் தீவிரமாக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
