“எந்தச் சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டதோ, அதே சமூகத்தைச் சேர்ந்த என்னை உயர்கல்வித் துறை அமைச்சராக்கியது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை” என அமைச்சர் கோவி செழியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ஓலைக்குடிசையில் பிறந்த எளியவனான நான், திருவிடைமருதூர் தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 எனத் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தபோது, டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில், எளிய பின்னணி கொண்ட எனக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் என்ற பொறுப்பை வழங்கினார்.

எந்தச் சமூகத்திற்கு ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டதோ, அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்கல்வித் துறை அமைச்சராக்கியது அம்பேத்கரின் கொள்கைகளுக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது வெறும் வாய்வார்த்தை அல்ல என்பதை முதல்வர் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, உணர்ச்சி மேலிட கண்கலங்கினார். அமைச்சரின் இந்தப் பேச்சு அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.