தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, கூட்டணியில் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பிரசாத் விடுத்துள்ள அறிக்கை இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

மேலும் “திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே லட்சியம்” என்று விஜய் கூறுவது உண்மையானால், சிதறிக்கிடக்கும் வாக்குகள் ஆளுங்கட்சிக்கே சாதகமாகும் என்பதை உணர்ந்து, அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்க்க வேண்டும் என பிரசாத் அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, பாஜகவின் இந்த வெளிப்படையான அழைப்பு விஜய்யின் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திராவிட அரசியலுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், இந்த அழைப்பை ஏற்று தேசியக் கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்துவமான பாதையில் பயணிப்பாரா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.