ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 5 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய அரசு, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூடுதல் செயலாளர் அசிம் மகாஜன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் 14 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு அண்டை நாடான ஓமனுக்கும் பரவியுள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ஈராக் அருகே தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு உயிரிழந்த மற்றொரு இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரவும், மீட்கப்பட்டவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரவும் இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
