மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு மட்டும் ஈரான் ஒரு மிகப்பெரிய ‘ஸ்பெஷல்’ சலுகையை அறிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் எவ்விதத் தடையும் இன்றி பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே நடந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த அதிரடித் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவிற்கு மட்டும் கிடைத்துள்ள இந்த விலக்கு சர்வதேச அரசியலில் இந்தியாவின் பலத்தை நிரூபித்துள்ளது.

​இது குறித்துப் பேசிய இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, “இந்தியா எங்களின் உண்மையான நண்பன். இந்திய மக்களின் துயரம் எங்களது துயரம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி தேவையில் பெரும் பகுதி இந்த வழியாகத்தான் வருகிறது என்பதால், இந்த அனுமதி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. “இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான நம்பிக்கையும் நலன்களும் இருப்பதால், இந்தியாவிற்கு உதவ வேண்டியது எங்களது கடமை” என்றும் அவர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் போரால் மிரண்டு போயிருக்கும் வேளையில், இந்தியாவின் ராஜதந்திரம் ஈரானின் மனதையே மாற்றியுள்ள இந்தச் சம்பவம் இப்போது வைரலாகி வருகிறது