ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நிலையில், தாய்லாந்து நாட்டில் மின்சாரத்தைச் சேமிக்க அந்நாட்டு அரசு ஒரு வினோத உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஏசி-யை (AC) 27 டிகிரிக்கு மேல் தான் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக 24 டிகிரியில் இருந்தால் தான் குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் 27 டிகிரியில் வைத்தால் மின்சாரம் மிச்சமாகும் என்றாலும் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

அரசின் இந்த சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தாய்லாந்து டிவி செய்தியாளர்கள் அதிரடி முடிவெடுத்தனர்.

நேரடி ஒளிபரப்பில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோதே, பெண் செய்தியாளர் உட்பட மூன்று பேர் தங்களது கனமான கோட் சூட்களை கழற்றி வைத்துவிட்டுச் செய்தி வாசித்தனர்.

“அரசே சிக்கனமாக இருக்கும்போது, நாங்களும் புழுக்கத்தைத் தாங்கிக் கொண்டு கோட் சூட் இல்லாமல் பணியாற்றத் தயார்” என்பதே அவர்களின் மெசேஜ். அதுமட்டுமில்லாமல், லிப்டுக்குப் பதில் படிக்கட்டுகளைப் பயன்படுத்துமாறும், இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் பங்குகளை மூடவும் தாய்லாந்து அரசு ஆலோசித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.