தமிழக அரசியலில் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் பவானி பகுதிகளில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் போது பேசிய இ.பி.எஸ், ஜெயலலிதா அவர்கள் ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார் என்றும், ஆனால் அந்த நன்றியை மறந்துவிட்டு இன்று ‘தீயசக்தி’ திமுகவில் அவர் இணைந்துவிட்டார் என்றும் விமர்சித்தார்.
ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே திமுகவின் ‘பி டீம்’ ஆகத்தான் செயல்பட்டு வந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி, ஜெயலலிதா ஆட்சியைத் தள்ளிவிடப் பார்த்த துரோகிகளை எல்லாம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் அதிமுகவை விட்டு விரட்டிவிட்டதாக ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் போன்ற துரோகிகளைச் சேர்த்துக்கொண்ட ஸ்டாலின், தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதிமுக இப்போது தூய்மையான இயக்கமாக மாறிவிட்டது என்றும் அவர் மார்தட்டினார்.
ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் ஜம்ப், அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடியின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
