தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

பவானியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய அவர், ஆளும் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

“தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களையும் சுரண்டி, ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வளமாக வாழ்ந்து வருகிறது” என்று அவர் சாடினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்களை முடக்கிவிட்டு, குடும்ப அரசியலை மட்டுமே முன்னிறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைச் சுட்டிக்காட்டிய இ.பி.எஸ், “நன்றியை மறந்து ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்;

இது துரோகத்தின் உச்சம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜி போன்றவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் அரசியல் நடத்துவது அவருக்கே வினையாக முடியும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் இதற்குப் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கர்ஜித்தார். எடப்பாடியின் இந்தப் பேச்சு, மேற்கு மண்டல அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.