திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போளூர் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி, தனது தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வந்தவாசியில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த ஆற்காட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சிறுமி கூற, அதற்கு ஆசை வார்த்தை காட்டிய பாத்திமா, சிறுமியைத் தனது கணவரான லாரி டிரைவர் இம்ரான் பாஷா மற்றும் கிளீனர் அஜ்மல் பாஷா ஆகியோருடன் லாரியில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வழியில் ஓடும் லாரியிலேயே இம்ரான் பாஷாவும், அஜ்மல் பாஷாவும் சேர்ந்து அந்தப் பிஞ்சு சிறுமியைக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த கொடூரர்களிடமிருந்து ஒருவழியாகத் தப்பியோடிய சிறுமியைப் பொதுமக்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்படவே, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துப் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக இந்த வழக்கை வந்தவாசி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய வந்தவாசி போலீசார், இந்தத் துரோகத்திற்கு உடந்தையாக இருந்த பாத்திமா, சிறுமியைச் சீரழித்த இம்ரான் பாஷா, அஜ்மல் பாஷா ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.