ஜமைக்காவின் தடகள ஜாம்பவானும், 8 முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவருமான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ், தனது மகன் சியோனின் பள்ளி விளையாட்டு விழாவில் பங்கேற்று மற்ற தாய்மார்களைத் தனது வேகத்தால் வியக்க வைத்துள்ளார். தாய்மார்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களமிறங்கிய ஷெல்லி-ஆன், மற்றவர்களை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளி மின்னல் வேகத்தில் இலக்கைத் தொட்டார். அவர் ஓடிய வேகத்தைப் படம்பிடிக்க முயன்ற ட்ரோன் (Drone) கூட திணறிப்போன காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

​”என்னை இன்னும் தடை செய்யவில்லை, அதனால் நான் ஓடுகிறேன்” என வேடிக்கையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார் 38 வயதான ஷெல்லி-ஆன். கடந்த 2023-ஆம் ஆண்டும் இதேபோல மகனின் பள்ளியில் வெற்றி வாகை சூடிய அவர், பாரிஸ் ஒலிம்பிக் காயத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் பழைய ஃபார்மிற்குத் திரும்பியுள்ளார். 2025-ஆம் ஆண்டு மீண்டும் தொழில்முறை ஓட்டப்பந்தயங்களுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ள நிலையில், மகனின் பள்ளி மைதானத்தில் அவர் காட்டிய இந்த வேகம் அவரது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.