தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி இந்தப் பிரச்சார மேடையில், “திமுகவை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்ற அதிரடி முழக்கத்துடன் தனது உரையை ஆற்ற உள்ளதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சஸ்பென்ஸாக நீடிக்கும் அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ளனவா? இல்லையா? என்பதற்கான தெளிவான விடையும் அதே ஜனவரி 23-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஜனவரி 23-ஆம் தேதியன்று தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
