தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சமீப காலமாக தங்கள் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது அதிக அளவில் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக மாற்றுக் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 26 மற்றும் 27-வது பகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் த.வெ.க இளைஞர்கள் பலரும் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்துள்ளனர்.

அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து அவர் முறைப்படி வரவேற்றார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தத் திடீர் கட்சித் தாவல்கள் அந்தந்தப் பகுதிகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.