தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் த.வெ.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் தனது உறுப்பினர் அட்டையை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உறுப்பினர் அட்டையின்படி, சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினராக அவர் பதிவு செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க-வில் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வருவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
