ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத்தைத் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தைப்பூசத் திருநாளில் நடைபெற்ற இந்த நிகழ்விற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தனது சினிமாத் தொழிலை உதறித் தள்ளிவிட்டு, மக்களுக்காகப் பணியாற்றும் நோக்கில் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் காட்டும் திசையில் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரது முகத்தைக் காண ஆவலோடு திரள்வது மாற்றத்தின் அறிகுறி.

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு (தி.மு.க – அ.தி.மு.க) மாற்றாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

விரைவில் மாற்றுக்கட்சிகளிலிருந்து ஏராளமானோர் த.வெ.க-வில் இணைய உள்ளனர்.

அதிமுக-வின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், “நான் அதிமுக-வில் இருந்தபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் படத்தை வைத்துள்ளனர். அந்தக் கட்சி எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார். மேலும், ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் மாவட்டச் செயலாளர் கூட நியமிக்கப்படாமல், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ பொறுப்பு வகித்து வருவதே அந்தக் கட்சியின் சரிவுக்குச் சாட்சி என்றார்.

மேலும் கூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதைத் தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். அவரது மாநில அளவிலான சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.