சமூக வலைதளங்களில் நாள்தோறும் வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இரண்டு நண்பர்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான, அதேசமயம் சிரிப்பை வரவழைக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு நண்பர்கள் தங்கள் புதிய ஐபோன்களில் ஆர்வமுடன் ‘ரீல்ஸ்’ பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின்புறம் உள்ள ஜன்னல் கதவு திறந்திருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக, ஜன்னல் வழியாக கையை நுழைத்த மர்ம நபர் ஒருவர், ஒரு இளைஞரின் கையில் இருந்த ஐபோனை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

தன் போன் திருடுபோன அதிர்ச்சியில் உறைந்த அந்த இளைஞர், திருடனை விரட்டிச் செல்வதற்குப் பதிலாக, அருகில் இருந்த தனது நண்பனின் ஐபோனை வாங்கினார். அதன் ‘டார்ச் லைட்டை’ ஆன் செய்து, ஜன்னல் வழியாக வெளியே திருடன் எங்கே சென்றார் என்று பார்க்க முயன்றார்.

 

View this post on Instagram

 

A post shared by AC_Unknown (@ac_unknown01)

ஆனால், அங்கேதான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. ஜன்னலுக்கு வெளியே பதுங்கியிருந்த அதே திருடன், அந்த இரண்டாவது ஐபோனையும் லாவகமாகப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். தனது போனை இழந்தது மட்டுமின்றி, நண்பனின் போனையும் திருடனிடம் தாரைவார்த்த அந்த இளைஞரின் நிலையைப் பார்த்து சமூக வலைதளங்களில் சிரிப்பலை எழுந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர். இதற்கு கமெண்ட் செய்துள்ள பயனர் ஒருவர், “தான் மூழ்கியது மட்டுமில்லாமல் நண்பனையும் சேர்த்தே மூழ்கடித்துவிட்டாரே!” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “அந்த திருடன் மிகவும் புத்திசாலி” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ  இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.