தொழில்துறை எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.21.92 உயர்த்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் (IOC) அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ரூ.87.67-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் தொழில்துறை எரிபொருள், இன்று முதல் ரூ.109.56-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதால், எரிபொருளைப் பெருமளவில் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

​சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த அதிரடி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேடியாக ரூ.21-க்கு மேல் விலை உயர்த்தப்பட்டிருப்பது, உற்பத்திச் செலவை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் எனத் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு மறைமுகமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.