மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் என்ற விவசாயியின் வெற்றிக்கதை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு தனது வீட்டின் மொட்டைமாடியில் வெறும் 100 கோழிகளுடன், தந்தையிடமிருந்து பெற்ற 3,000 ரூபாயைக் கொண்டு தனது பயணத்தைத் தொடங்கிய இவர், இன்று 1.8 லட்சம் கோழிகள் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவிலான பண்ணையுடன் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும் இடையில் பறவைக் காய்ச்சல் போன்ற பேரிடர்களால் தொழிலில் கடும் முடக்கம் ஏற்பட்ட போதிலும், மனம் தளராமல் மீண்டும் வங்கிக்கடன் பெற்று தனது கடின உழைப்பால் முன்னிலும் சிறப்பாகத் தனது வணிகத்தை நிலைநிறுத்தினார். தற்போது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள விவசாய மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் ரவீந்திர மெட்கரின் சாதனை, இன்று சர்வதேச எல்லையைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் இவரது வியக்கத்தக்க முன்னேற்றத்தைப் பாராட்டும் விதமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவரை உரையாற்ற சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளது. ஒரு சாதாரணக் கிராமத்து விவசாயி, தனது அசாத்திய உழைப்பின் மூலம் லண்டன் வரை சென்று உலகளாவிய மேடையில் உரையாற்றவிருப்பது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது.
