சண்டிகர் யூனியன் பிரதேசத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த எம்.பி.ஏ. மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான டாக்ஸி டிரைவர் மோனு குமாருக்கு (39) நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ஜூலை 30, 2010 அன்று  தனது ஸ்கூட்டரில் வந்த  21 வயது மாணவியைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மோனு குமார், 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். மாணவியின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட விந்தணு மாதிரிகளே, குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தன.

கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் யாஷிகா, மோனு குமாரை இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) மற்றும் 376 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் குற்றவாளியாக அறிவித்துள்ளார். தண்டனை விவரம் சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

நீண்ட காலமாகத் துப்புத் துலங்காமல் இருந்த 2010-ஆம் ஆண்டு கொலை வழக்கு, 2022-ஆம் ஆண்டு மலோயாவில் நடந்த 40 வயதுப் பெண் கொலை சம்பவம் மூலம் மீண்டும் உயிர் பெற்றது. தடயவியல் ஆய்வில், 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டு நடந்த இரண்டு கொலைகளிலும் சேகரிக்கப்பட்ட விந்தணு மாதிரிகளின் டிஎன்ஏ-வும் ஒரே நபரைச் சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீசார் 2010-ஆம் ஆண்டு வழக்கை மீண்டும் கையில் எடுத்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, 2024 பிப்ரவரியில் செக்டார் 54-ல் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 55 வயதுப் பெண்ணின் ஆடைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் மோனு குமாரின் டிஎன்ஏ-வுடன் ஒத்துப்போனது. இதைத் தொடர்ந்து, ரகசியத் தகவலின் அடிப்படையில் 2024 மே மாதம் மோனு குமார் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மோனு குமார், 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக ஆதார் அட்டை கூடப் பதிவு செய்யவில்லை என்றும், வெளியூர் டாக்ஸி டிரைவராகப் பணியாற்றியதாலேயே பெரும்பாலும் ஊரை விட்டு வெளியே இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கு ஒரு வருடத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோனு குமார் மீது சண்டிகரில் இந்த மூன்று கொலை வழக்குகள் உட்பட மொத்தம் ஏழு வழக்குகள் உள்ளன.