வங்கதேசத்தில் உள்ள பழைய டாக்கா பகுதியில், லால் சந்த் சோஹாக் என்ற ஹிந்து வியாபாரி, கடந்த ஜூலை 9-ஆம் தேதி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிட்போர்ட் மருத்துவமனை முன்பு சிலர் அவரிடம் பணம் பறிக்க முயன்ற நிலையில், அவரை கான்கிரீட் கல்லால் அடித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சோஹாக் உயிரிழந்ததுடன், அவரது சடலத்தின் மீது அந்தக் கொலைகாரர்கள் நடனம் ஆடிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது வங்கதேசத்திலும், இந்தியாவிலும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த 2 பேரை உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 பேருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைக்கு எதிராக வங்கதேசத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பேரணி நடத்தி, இடைக்கால அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகியபின், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த ஆட்சிக்காலத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமைக் கவுன்சிலின் அறிக்கையின்படி, 2024 ஆகஸ்ட் 4-ஆம் தேதியிலிருந்து தற்போது வரையில், ஹிந்துக்களும் பிற சிறுபான்மையினரும் 2,442 மதவன்முறை சம்பவங்களை சந்தித்துள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 150-க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களால் கடும் அதிருப்தியில் உள்ள இந்தியா, வங்கதேச அரசை கடுமையாக கண்டித்து, அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.