மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் நௌதா கிராமத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பஞ்சாயத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது. விழா நிறைவில் பாரம்பரியப்படி அனைவருக்கும் இனிப்பாக லட்டு வழங்கப்பட்டது.

ஆனால், அதில் ஒருவரான கமலேஷ் குஷ்வாஹா எனும் இளைஞர், தன்னுடன் இன்னொரு லட்டு கூடுதலாக தரப்பட வேண்டும் எனக் கோரினார். அவர் கேட்டபோதும் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரே ஒரு லட்டு மட்டுமே வழங்க, அதில் ஏமாற்றமடைந்த அவர் நேரடியாக முதல்வர் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், “இது தேசிய விழா. ஆனால் எனக்கு எதிர்பார்த்தபடி இனிப்பு வழங்கப்படவில்லை. இதைத் திருத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வினோத புகார் இணையத்தில் விரைவில் பரவி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஒரே ஒரு லட்டுக்காக முதல்வரிடம் புகாரா?” என பலர் கமெண்ட் போட, சிலர் “பொதுமக்களின் உரிமையை வலியுறுத்திய வழிகாட்டி” என புகழ்ந்தும் வருகின்றனர்.

இதையடுத்து, கிராம பஞ்சாயத்து நடவடிக்கை எடுத்து, சந்தையில் இருந்து லட்டு வாங்கி அந்த இளைஞரிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பஞ்சாயத்து செயலாளர் ரவீந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். “அனைவருக்கும் சமமாக லட்டு வழங்கப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்த கோரிக்கையை மனதில் வைத்து, தற்போது தனிப்பட்ட முறையில் அவருக்கு லட்டு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இது இந்தியாவின் “லட்டு ஜனநாயகம்” என சொல்லப்படும் வகையில், சமூக வலைதளங்களில் காமெடியான திசையில் வைரலாகி வருகிறது.