2026-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தொடர் நாயகனுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய அவர், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மேலும் முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 97* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது சாம்சனின் திறமைக்குச் சான்றாக அமைந்தது. ஐசிசி வெளியிட்டுள்ள இந்தச் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சஞ்சு சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் எய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, டிம் செய்ஃபெர்ட் மற்றும் ரச்சின் ரவிந்திரா போன்ற சர்வதேச முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். சாம்சனின் இந்த அபாரமான ஃபார்ம் இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், சஞ்சு சாம்சன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.