2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது, இலங்கையின் கண்டியில் உள்ள ஹோட்டல் பெண் ஊழியரிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா அத்துமீறியதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சல்மான் மிர்சா, தன் மீது சுமத்தப்பட்டது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கொந்தளித்துள்ளார்.
இது போன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை வெளியிடுவது “மலிவான இதழியல்” என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
மேலும் சல்மான் மிர்சா மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்று வாரியம் தெரிவித்துள்ளது. அடிப்படை ஆதாரமின்றி இந்தச் செய்தியை வெளியிட்ட தனியார் செய்தி நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிசிபி வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் களத்தில் மோசமான செயல்பாட்டால் ஏற்கனவே விமர்சனங்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு, தற்போது எழுந்துள்ள இந்த ஒழுக்கமின்மை புகாரும், அதற்கெதிரான சட்டப் போராட்டமும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
