இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய மைல்கல்லை எட்டி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20, 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 8-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
தற்போது 32 வயதாகும் பும்ரா, இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், 94 டி20 போட்டிகளில் 117 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2016-ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தனது அசாத்தியமான வேகம் மற்றும் துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர், நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
இந்நிலையில் குறிப்பாக, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். பும்ராவின் இந்த அபார வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு வரலாற்றில் ஒரு பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது.
