கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட டோனிகரா கிராமத்தைச் சேர்ந்தவர் மாரம்மா (35). இவர், கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா (40) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கடந்த ஒரு ஆண்டு காலமாக மாரம்மா தனது தாயார் வீட்டிலேயே தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் சங்கப்பா தனது மனைவியை சந்திக்க சுராபுராவுக்கு வந்தார். அப்போது அவர் தன் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு மாரம்மா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தகராறாக மாறியதால், ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து மாரம்மாவை பலமுறை வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரம்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா, சுராபுரா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சங்கப்பாவை கைது செய்த போலீசார் அவர்மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
