மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணையில் (Bargi Dam) நடந்த கோர படகு விபத்து நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.

இந்த விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு படகில் இருந்த பயணிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது.

வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் பலத்த காற்றை ரசித்தபடி, சிரித்துப் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், யாரும் உயிர் காக்கும் கவசமான ‘லைஃப் ஜாக்கெட்’ (Life Jacket) அணியவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் படகு நிலைதடுமாறி தண்ணீருக்குள் மூழ்கியதில், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடக்கும்போது ஊழியர்கள் அவசர அவசரமாக லைஃப் ஜாக்கெட்டுகளை பார்சலில் இருந்து பிரிப்பதும், அதற்குள் படகு மூழ்கத் தொடங்கியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“அரசு எச்சரிக்கை விடுத்தும் ஏன் படகு இயக்கப்பட்டது?” என பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.