ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தொட்டிக்குள் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகானேரில் உள்ள ஒரு பொதுப் பூங்கா கழிவறை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியைத் திறந்து அதற்குள் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை மூட்டைகளில் அள்ளிச் சென்றுள்ளனர். மக்கள் கூடத் தொடங்கியதைக் கண்டவுடன், அவர்கள் ஒரு மூட்டையுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.
அவர்கள் சென்ற பிறகு, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கழிவுநீர் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தபோது, உள்ளே ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து சுமார் 15 அடி தூரத்தில் இருந்த மற்றொரு தொட்டியைத் திறந்தபோதும், அதிலும் ரூபாய் நோட்டுகள் அழுக்கு நீரில் மூழ்கிக் கிடந்தன. இதனைப் பார்த்த மக்கள், சாக்கடை நீருக்குள் கையை விட்டு நோட்டுகளை அள்ளி, நல்ல தண்ணீரில் கழுவி எடுக்கத் தொடங்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மக்களிடமிருந்தும் கால்வாயிலிருந்தும் சுமார் 5,000 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. “இந்த நோட்டுகள் அசலானவையா அல்லது கள்ள நோட்டுகளா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.
बीकानेर में सीवरेज चैम्बर में हाथ डालकर लोगों ने 500-500 के नोट निकाल लिए, जिससे मौके पर भारी भीड़ जुट गई।
पुलिस ने बाद में पहुंचकर सभी नोट जब्त कर जांच शुरू कर दी है। pic.twitter.com/tTAE3oDvfG— 🦋forever chahat🦋 (@Chahak__soni_pc) May 1, 2026
பண மூட்டையுடன் தப்பியோடிய அந்த மர்ம இளைஞர்கள் யார்? இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தன? ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்காக இவை பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தப்பியோடிய நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் சாக்கடைக்குள் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால், பிகானேர் நகரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
