அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான ஜீன் லாங் என்பவர், தான் ஒரு மணிநேரம் இறந்து மீண்டும் உயிர் பிழைத்ததாகவும், அப்போது ‘மறு உலகத்தை’ நேரில் கண்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

போதைப் பழக்கம் மற்றும் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜீன், ரத்த சர்க்கரை அளவு 1900-க்கும் மேல் அதிகரித்ததால் கோமா நிலைக்குச் சென்றார். அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், அவரது பெற்றோரின் சம்மதத்துடன் ‘லைஃப் சப்போர்ட்’ இயந்திரம் அகற்றப்பட்டது.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் சுவாசம் நின்ற நிலையில், இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, திடீரென ஜீன் உயிர் பெற்று எழுந்தது அனைவரையும் மிரள வைத்துள்ளது.

மரணத்தின் பிடியில் இருந்த அந்த ஒரு மணிநேரத்தில் தான் கண்ட விசித்திர அனுபவங்களை ஜீன் பகிர்ந்துள்ளார். தான் ஒரு மாபெரும் ‘ஆற்றல் பெருங்கடலில்’ (Ocean of Energy) மிதப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், அது தண்ணீரால் ஆனது அல்ல, பல வண்ணமயமான ஒளிகளால் நிறைந்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அங்கு தனது தாத்தாவைப் போன்ற தோற்றம் கொண்ட, ஆனால் முகம் இல்லாத, முற்றிலும் ஒளியால் ஆன ஒரு ‘புனித ஆன்மாவை’ கண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உயிர் பெற்ற பிறகு, வியக்கத்தக்க வகையில் அவருக்கு எந்த நோயின் அறிகுறிகளும் இல்லை என்றும், இந்தச் சம்பவம் தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.