மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) ஈரானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இந்தியா மிகப் பெரிய ராஜதந்திர அடியைக் கொடுத்துள்ளது.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக விடுத்துள்ள அச்சுறுத்தலைக் கண்டித்து பஹ்ரைன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உட்பட 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நின்ற நிலையில், ஈரானுக்கு எதிராகத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஈரான் சர்வதேச அரங்கில் தனித்து விடப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
பஹ்ரைன் தலைமையிலான இந்தத் தீர்மானத்திற்கு இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான், சவுதி அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வளைகுடா நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ள இந்தத் தீர்மானம், அண்டை நாடுகளுக்கு எதிராக மறைமுகக் குழுக்களை பயன்படுத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, சர்வதேசக் கடல் பாதைகளில் வணிகக் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை ஈரான் மதிக்க வேண்டும் என்றும், ஆத்திரமூட்டும் செயல்களை நிபந்தனையின்றி நிறுத்த வேண்டும் என்றும் ஐநா கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ரீதியாக நெருங்கிய உறவு கொண்டுள்ள இந்தியா, ஈரானுக்கு எதிராக எடுத்த இந்த அதிரடி முடிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
